Friday 13 April 2012

சில் சில்...கூல் கூல்!

மும்பை காதர் மசூதி தெருவில் ஷாப்பிங் செய்து களைத்தவர்களுக்கு அங்கு கிடைக்கும்
ஸ்பெஷல் ஜூஸ் ஒரு வரபிரசாதம். சும்மா இல்லைங்க.. காரட், புதினா, நெல்லிக்காய், லெமன், பீட்ரூட், இந்த ஐந்திலும் சேர்க்க வேண்டிய அளவுகளை சேர்த்து சூப்பர் சுவையில் ஜூஸ் தருகிறார்கள்.


காரட், பீட்ரூட்டின் இனிப்புசுவை, நெல்லிக்காயின் இனிப்பு, புளிப்பு, கரிப்பு, துவர்ப்பு சுவை, புதினாவின் மின்ட் சுவை, லேமனின் புளிப்புசுவை என அனைத்துச் சுவையும் சேர்ந்து ஒரு அபாரச் சுவை அந்த ஸ்பெசல் ஜூஸில்! 

மும்பை ஸ்பெசல் ஜூசை நம் வீட்டிலும் தினம் செய்து பருகினால் கோடைக்கால குளுமை மட்டும் அல்ல...எவர்க்ரீன் உடல் ஆரோக்யமும் பெறலாம் என்று கூறும் ஆயுர்வேதா டாக்டர் ரேகாராவ் மேலும் இந்த ஜூஸில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விரிவாகக் கூறுகின்றார்.
காரட்; இதை தாவரத்தங்கம் என்றே சொல்லலாம்...தொடர்ந்து காரட்டை சாப்பிட்டு வந்தால் தங்கத்தை போல மேனியை பளபளப்பாக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டின் புற்று நோயை உடலில் அண்டவிடாது. வயிறு, குடல் தொடர்பான நோயை குணப்படுத்தும் ஆற்றல் காரட்டுக்கு உண்டு. ஈறு நோய்களை குணப்படுத்தி பல் துர்நாற்றத்தை போக்கிவிடும்.
நெல்லிக்காய்; நெல்லிக்காயில் வைட்டமின் சி ,ஈ ,டி உள்ளது. இந்த மூன்று வைட்டமின்களும் வாதம், பித்தம், கபம் தோஷங்களை போக்க வல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும், நூறு ஆண்டுகள் இளமையுடன் வாழலாம்.
ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு தேவையான 50 கிராம் வைட்டமின் சி சக்தி 4 சாத்துக்குடி அல்லது 8 தக்காளியில் கிடைக்கும்..ஆனால், அந்த சக்தி ஒரேஒரு பெரிய நெல்லிக்காயில் கிடைத்து விடுகிறது என்றால் நெல்லிக்காயின் மகிமையை பார்த்துக் கொள்ளுங்கள்
புதினா; புதினாவை ஒரு மருத்துவ மூலிகை என்றே சொல்லலாம். வயிற்றுவலி, வயிற்று பொருமல். செரியாமை, இவைகளுக்கெல்லாம் முதலுதவி மூலிகையாகவே இருக்கிறது இந்த புதினா. இதன் மணமே பசியை அபாரமாக தூண்டிவிடும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான தாதுச்சத்துக்கள் புதினாவில் குவிந்து கிடக்கின்றன. பல் ஈறு நோயை குணப்படுத்துவதில் புதினாவுக்கு நிகர் புதினாதான். ரத்தத்தை சுத்தமாக்கி, ஊளைச்சதையை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
பீட்ரூட்; புற்று நோய் பரவுவதையே தடுக்கும் ஆற்றல் இந்த பீட்டுரூட்டுக்கு உண்டு. அரிப்பு எரிச்சலை போக்கி குளிர்ச்சியை தரும். இதன் கார்போகைட்ரெட் சர்க்கரை துகள்களாக இருப்பதால் ஜீரணமாகி நேராக ரத்தத்தில் கலந்து உடனடி எனர்ஜியை தருகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் புது அணுக்களை உருவாக்குகிறது. மொத்தத்தில் இதை ஒரு ரத்த விருத்தி டானிக் என்று சொல்லலாம்.
லெமன்; சிறு நீராக கல் உருவாகாமல் தடுப்பதி லெமனுக்கு நிகரில்லை. தினசரி நம் உணவில் சேரும், உப்பு, கல்சியம், புரோட்டின் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைத்து சிறு நீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க லெமன் ஜூஸ் கைகண்ட மருந்து என ஆச்சரியப்படும் தகவல்களைத் தருகிறார் டாக்டர் ரேகாராவ்.
மும்பையில் மட்டும்தான் அந்த ஸ்பெசல் ஜூஸ் கிடைக்குமா என்ன..? நாமும் ஜூஸ் செய்யலாம், பருகலாம்!
தேவையானவை: ஜூஸ் கேரட் -2, பீட்ரூட் - பாதி அளவு, லெமன்-அரை மூடி, நெல்லிக்காய்-ஒன்று, புதினா இலைகள்-15
செய்முறை: கேரட், பீட்ரூட் இவைகளை தோல் எடுத்துக் கொள்ளவும்.பின், இத்துடன் நெல்லிக்காய், புதினா இலைகள் சேர்த்து அரை டம்ளர் ஐஸ் தண்ணீர்விட்டு மிக்சியில் நன்றாக அடிக்கவும். பின்னர் வடிகட்டி, அரை மூடி லெமன் பிழிந்து, தேவையானால் ஐஸ் போட்டு பருகவும்.


No comments:

Post a Comment